
நீட் தேர்வு ரத்துச் செய்யப்பட்ட விவகாரத்தில் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் நீட் தேர்வுக்கான வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிட்டதாகப் பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்பும் பல ஆண்டுகளில் நீட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளைப் பட்டியலிட்டுள்ளார். பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்து, சிபிஐ விசாரணை நடத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றுடன், தமிழ்நாடு, கேரள, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் மூலமாக முளைத்துள்ள பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புரள்வதைக் குறிப்பிட்டுள்ளார். CBSE பாடத்திட்டத்துக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வில் கோச்சிங் இல்லாமல் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


