
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு விரைவில் கைது செய்யப்படுவார். நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக 150 பேரிடம் 35 கோடி ரூபாய் வசூல் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் அமைச்சராக பதவி வகிப்பவர் கே என் நேரு. திருச்சி மேற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரான இவர் திமுக தலைமை கழக முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார் .
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அமைந்த அமைச்சரவையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் அமைச்சராக பதவி ஏற்றார் . திருச்சி அருகே உள்ள நெய் குளம் என்ற கிராமத்தில் பிறந்த கே என் நேரு 1986 ஆம் ஆண்டு புள்ளம்பாடி யூனியன் தலைவராக பதவி வகித்து கட்சியின் மேல் இடத்தை பிடித்தவர் .
திருச்சி என்றால் கே என் நேருவின் கோட்டை என்ற அளவுக்கு பெயர் பெற்றவர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல் திருச்சியிலும் கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் பிரம்மாண்டமான மண்டபம் ஒன்றை கட்டினார். இதன் மூலம் இவர் புகழ் திருச்சி முழுவதும் பரவியது திமுகவின் உயர்மட்ட குழுவிலும் இவர் ஒரு உறுப்பினராக இருக்கிறார் .
தற்பொழுது நகராட்சி நிர்வாக துறையில் அமைச்சர் கே என் நேரு வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள் இளநிலை பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2538 பணியிடங்கள் காலியாக இருந்தன .
இதற்கான தேர்வு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது தமிழகம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள் . இந்தத் தேர்வில் ஒரு காலியிடத்திற்கு 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தற்போது குற்றம் சாட்டி இருக்கிறது .
இதுபோல் 150 பேரிடம் சுமார் 35 கோடியில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.
எனவே அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது . அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமாக ட்ரூ வேல்யூ ஹோம் என்ற நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மோசடி நடந்ததாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இது தொடர்பான சோதனைகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன இதில் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர் . கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அமலாக்க துறையினர் அந்த ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தபோது அதிர்ச்சியான ஒரு தகவல் தெரிய வந்திருக்கிறது .
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இந்த ஆண்டு பணி நியமனங்கள் நடைபெற்ற போது அண்ணா பல்கலை சார்பில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அதாவது கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார் .



