
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் நாள் நடத்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் கணினி வழியாகத் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
தில்லியில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வு தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மே 3ஆம் நாள் நடத்தப்பட்ட நீட் தேர்வு குறித்து, மே 7ஆம் நாள் ஒரு புகார் வந்ததாகத் தெரிவித்தார். அது குறித்து உடனடியாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டதாகவும் கூறினார்.
இது தொடர்பாகப் பல்வேறு மாநிலங்களில் விசாரித்ததில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டி வெளியானது தெரியவந்ததாகவும், இதனால் நீட் தேர்வை ரத்துச் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், முறைகேடுகளால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டது வருத்தமளிப்பதாகவும், இருந்தாலும் நாட்டின் நலன் கருதித் தேர்வை ரத்துச் செய்த முடிவை எடுத்ததாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
தேசியத் தேர்வு முகமை தகுதியுள்ள தலைமையிடமே உள்ளதாகவும், இது உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையாலேயே அமைக்கப்பட்டதாகவும் கூறினார். தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளை ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் எழுதுவதாகவும், அதில் தவறுகளே நேராமல் இருப்பதை உறுதி செய்வோம் என்றும் கூறினார்.
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வைக் கணினி அடிப்படையிலானதாக நடத்த உள்ளதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஜூன் 21ஆம் நாள் மறுதேர்வு நடத்த உள்ளதாகவும், இம்முறை தேர்வெழுதக் கூடுதலாகக் கால்மணி நேரம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
பிற்பகல் 2 மணி முதல் ஐந்தேகால் மணி வரை தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். தேர்வுக்கான அனுமதிச் சீட்டு ஜூன் 14ஆம் நாள் வழங்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.


