Mkstalin:ரூ.500 கோடி முதலீடு; கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்து வருகிறார்.

இன்று (செப்டம்பர் 12) முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்களை விரிவுப்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

கட்டுமானம், சுரங்க கருவி, இயற்கை எரிவாயு இயந்திரம், டீசல் எலெக்ட்ரிக் என்ஜின்களை கேட்டர்பில்லர் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. டிராக்டர், வீல் லோடர்கள், மோட்டார் கிரேடர்கள், என்ஜின் உள்ளிட்டவற்றை கேட்டர் பில்லர் தயாரிக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *