தமிழ்நாட்டில் இதுவரை 7600 வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு.!

Advertisements

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 234 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 7600 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வேட்புமனுக்கள் ஏற்கத்தக்கனவா என்று அதிகாரிகள் இன்று பரிசீலனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் நாள் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இறுதிநாளில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

234 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 7600 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் ஆறாயிரத்து 217 பேர் ஆண்கள், 1380 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் மூவர். குறைந்த அளவாக நீலகிரி மாவட்டம் உதக மண்டலம் தொகுதியில் 13 பேரும், அதிக அளவாகக் கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் 77 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்கத் தக்கனவா என்பதைத் தேர்தல் அதிகாரிகள் இன்று பரிசீலனை செய்து வருகின்றனர். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் ஒன்பதாம் நாள் கடைசி நாளாகும். அன்று மாலையில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் வெளியாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *