பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி!

Advertisements

பழநி:

Advertisements

மழை மற்றும் குளிர் நிலவுவதால் பழநி முருகன் கோயிலில் தினமும் 5,000 பக்தர்களுக்குச் சுடச்சுட சுக்கு காபி இலவசமாக நேற்று முதல் வழங்கப்படுகிறது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை ஐயப்ப சீசனையொட்டி, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து ஐயப்ப பக்தர்களின் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. தினமும் அதிகாலை 4.30 மணி முதல் படிப்பாதை, யானை பாதை வழியாகப் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு மலையேறும்போது களைப்பு தெரியாமல் இருக்க தேவஸ் தானம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை மோர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மழைக்காலம் என்பதாலும், அதிகாலை மற்றும் பகலில் குளிர் நிலவுவதாலும் மோருக்கு பதிலாகப் பக்தர்களுக்கு நேற்று முதல் சுடச்சுட சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.

மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பர் கோயில் அருகே தினமும் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை சுடச்சுட சுக்கு காபி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு சேர்த்து சுக்கு காபி தயாரிக்கப்படுகிறது. சுக்கு காபி தீர்ந்தால் உடனே தயார் செய்து தொடர்ந்து வழங்கப்படுகிறது.

தினமும் 5,000 பக்தர்களுக்கும், வரும் நாட்களில் பக்தர்களின் வருகைக்கேற்ப கூடுதலாக வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதேபோல், மலைக்கோயிலில் தினமும் காலை முதல் இரவுவரை 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாகப் பால் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *