உலகையே உலுக்கும் போர் பதற்றம்.. 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்..?

Advertisements

மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடான இஸ்ரேலும் நடத்திய தாக்குதல் கடந்த மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன. ஏனென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் விதித்த நிபந்தனைகள் ஈரானால் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாக இருந்தன.

இதேபோல் ஈரான் விதித்த நிபந்தனைகளையும் அமெரிக்காவால் ஏற்கமுடியாமல் போனது.  இதனால் இரு நாடுகள்  இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் சிக்கல் நீடித்தது. அமெரிக்கா, ஈரான்  நாடுகளிடையே பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது.  பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெஹ்ரான் சென்று இருக்கிறார்.

அதேநேரம், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இதனால் இன்னும் 24 மணி நேரத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லையெனில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது. ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து அமெரிக்க நிர்வாகம் பரிசீலித்து வந்த நிலையில், அந்நாட்டின் ராணுவம் மற்றும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதோடு,  அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது வார விடுமுறை நாட்களைக் கழிக்க நியூஜெர்சி செல்வது வழக்கம். ஆனால், இந்த வாரம் அதனை ரத்து செய்து விட்டார். அதோடு மே 23-ம் தேதி ட்ரம்பின் மகனுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தனது மகன் மணத்திற்குக் கூட செல்லாமல் அதிகாரிகளுடன் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

மகன் திருமணத்திற்கு செல்லாமல் இருப்பது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்த முக்கியமான காலகட்டத்தில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையிலேயே நான் தங்கியிருப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன்.  டான் மற்றும் பெட்டினாவுக்கு வாழ்த்துகள்! என்று அவர் ‘Truth Social’- மீடியாவில்  பதிவிட்டுள்ளார்.

மற்றொரு புறம்,  ஈரானும் போருக்கு ஆயத்தமாவதால் தனது நாட்டு வான்வெளியை முற்றிலுமாக மூடிவிட்டது. அணு குண்டுகள் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை ஈரான் வைத்திருக்க கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. ஆனால் தங்களிடம் தற்போது இருக்கும் யுரேனியம் தொடர்ந்து தங்களிடமே இருக்கும் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது.

டிரம்பும், ஈரானும் அவரவர் தரப்பில் உறுதியாக இருப்பதால் 24 மணி நேரத்தில் போர் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் வளைகுடா நாடுகளில் பதட்டம் அதிகரித்துள்ளது.ஈரானைப் பொறுத்தவரை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதுதான் அதிகமாக தாக்குதல் நடத்தும் என்பது தெரிந்த ஒன்று தான்.

இதனால் வளைகுடா நாடுகள் ஈரானை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. ஏற்கனவே நடந்த போரில் 40க்கும் அதிகமான அமெரிக்க விமானங்கள் நாசமாயின.  அதோடு அமெரிக்காவின் ஆயுதங்களின் அளவும் வெகுவாக குறைந்து விட்டது.இதனிடையே தான் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.

இந்தப் போர் நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி  அமெரிக்கா உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை வளைகுடா பகுதிக்கு யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்துள்ளது.அதோடு தைவான் உட்பட சில நாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது தங்களுக்கு ஆயுதங்களின் தேவை அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதிலிருந்து அமெரிக்கா பெரிய அளவில் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவது உறுதியாகி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *