
வெனிசுலா நாட்டுக்குள் புகுந்து அதிபரைக் கைது செய்த அட்டூழியத்தைக் கண்டித்துச் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெனிசுலா தலைநகர் கராக்கசில் வான்வழியாகப் படையினரை இறக்கிய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவர் மனைவியையும் சிறைபிடித்து நியூயார்க் நகருக்குக் கொண்டு சென்றுள்ளது. பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்காவின் இந்தப் போக்கைக் கண்டித்துச் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரம் விளக்கு மசூதி அருகில் இருந்து பேரணியாகச் சென்று அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முழக்கமிட்டு வந்த மார்க்சிஸ்ட் தொண்டர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். வண்டியில் ஏறாமல் அடம்பிடித்த போராட்டக்காரர்களை கைகால்களைப் பிடித்துத் தூக்கிச் சென்று பேருந்தில் ஏற்றினர்.



