
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பனைத்தொழிலாளர்கள் காப்புக் கட்டிப் பொங்கல் வைத்துக் கள்ளைப் படையலிட்டு வழிபட்டதுடன் குழந்தைகள் முதல் பெரியவர் வரை கள்ளருந்தி அது ஓர் உணவுப் பொருள் எனக் கூறினர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சப்பாணிப்பட்டியில் பனைத் தொழிலாளர்கள் சார்பில் பனைகளுக்குக் காப்புக் கட்டிப் பொங்கல் வைத்துக் காப்புக் கயிறு கட்டினர். பனை ஏறிக்கள் இறக்கிப் படையலிட்டுக் கற்பூரத் தீபம் காட்டி வழிபாடு நடத்தினர்.இதில் இருநூற்றுக்கு மேற்பட்ட பனை ஏறும் தொழிலாளர்கள் குழந்தைகள், பெண்கள் எனக் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். அப்போது மத்திய அரசு பனங்கள்ளை உணவுப் பொருளாக அறிவித்துள்ளதை வரவேற்றனர். மத்திய அரசு அறிவித்தும் கூட மாநில அரசு கள்ளை உணவுப் பொருள் பட்டியலில் சேர்க்காமல் கள் இறக்குவோர் மீது பொய் வழக்குப் பதிந்து மிரட்டுவதாகக் குற்றஞ்சாட்டினர்.
கள் என்பது போதை தரும் பொருளல்ல அது ஓர் இயற்கை உணவு என்று கூறிய அவர்கள், தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.பொய் வழக்குப் பதியும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து முழக்கமிட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கள் பருகி இது ஒரு போதை தரும் பானம் அல்ல உணவுப் பொருள் என வெளிப்படுத்தினர்.


