
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கனமழையாலும் பெருவெள்ளத்தாலும் 121 பேர் உயிரிழந்ததாகவும், 161 பேர் காணாமல் போனதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த வாரத்தில் கனமழை பெய்ததால் ஆறுகளில் கரைமீறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பேரழிவுகள், இழப்புகளைப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அதிபர் டொனால்டு டிரம்பும், அவர் மனைவி மெலனியாவும் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது பேசிய டிரம்ப், இதுபோன்ற பேரழிவைத் தான் இதற்கு குறித்து வேறெங்கும் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். வெள்ளப்பேரழிவில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததாகவும், 161 பேரைக் காணவில்லை என்றும் தெரிவித்தார். காணாமல் போனோரைத் தேடும் பணியில் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் ஒரு நாளைக்குப் பத்துமணி நேரம் தேடலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
குடலூப் ஆற்றங்கரையில் உள்ள கோடைக்கால முகாமில் தங்கியிருந்த 27 சிறுமிகள் வெள்ளத்தில் உயிரிழந்தது குறித்தும் டிரம்பும் அவர் மனைவியும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனர்.



