
கரூரில், பாஜக மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிமீது பொய் வழக்கு போடப்பட்டதாகக் கூறி பாஜகவினர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. பாஜக மாவட்ட பட்டியலணி நிர்வாகி உள்ளார். அவரது சொந்த ஊரான வேட்டையார் பாளையத்தில் அதே சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார்.
இந்தப் புகார் அடிப்படையில் ரவி கைது செய்யப்பட்டு, நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைக் கண்டித்து அவரது ஊர் பொதுமக்கள் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் நேற்று மாலை சின்னத் தாராபுரம் காவல்நிலையம் சென்று காவல்துறை அதிகாரியிடம் பொய் வழக்குகுறித்து விளக்கம் கேட்டனர்.
இந்தச் சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.ஆனால், பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், கரூர் – தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, பாஜக நிர்வாகிமீது போடப்பட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். உண்மையான குற்றவாளிமீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், மறியல் போராட்டத்தைக் கைவிட மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
இந்நிலையில், கரூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்தன், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் பேச்சு வார்த்தை நடத்தி, பொய் வழக்குகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புகார் கொடுத்த சக்திவேல் மீது வழக்கு போடப்படும் என்று கூறியதை ஏற்று இரணடு
மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தலைவர் செந்தில்நாதன், பட்டியல் இன மக்களின் பாதுகாப்பை காவல்துறையின் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு காவல்துறை உறுதி செய்யாவிட்டால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒப்புதல் பெற்று, கரூர் மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார். மேலும், மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் மதுபான கடைகளை மூட வேண்டும். கள்ளு கடை விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கூறினார்.

