மதுரை வந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா : அப்செட்டில் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன ..?

Advertisements

மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு  வந்த நிலையில், இம்முறையும் அவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்காதது அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் 4 முறை முதலமைச்சராக இருந்துவந்த இந்தியாவின் இரும்பு பெண்மனி என்று அழைக்கப்படும் அளவுக்கு திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருந்துவந்த  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் ஓ.பன்னீர்செல்வம்,

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் சின்னம் தொடர்பான பிரச்னை எழுந்தபோது, பாஜகவின் அறிவுறுத்தல் பேரில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சின்னத்தை விட்டுக் கொடுத்தார். 2024 மக்களவைத் தேர்தலின் போது கூட பாஜக கூட்டணியில்தான் ஓபிஎஸ் தரப்பு நீடித்தது. ராமநாதபுரம் என்கிற ஒரே தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் நின்ற ஓபிஎஸ், இரண்டாம் இடம் பிடித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளது.

இதனால் அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்யும், அதே சமயம் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதாகவே இருவரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமித்ஷா சில தினங்களுக்கு முன்பு மதுரை வந்தார். பாஜக மையக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் வரும் என்று சூளுரைத்துவிட்டுச் சென்றுள்ளார். இந்த முறையும் அமித்ஷா ஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது அவரை ஓபிஎஸ் தரப்பு சந்திக்க முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அது நடக்கவில்லை. இதனால் அமித்ஷா தங்களை சந்திக்காமல் சென்றது வருத்தமளிக்கிறது என்றும் ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்த முறையாவது அதுவும் ஓபிஎஸின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள மதுரைக்கு வந்திருந்தபோது அவரை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியான சந்திப்பு எதுவும் நிகழவில்லை. இதனால் தங்கள் தரப்பு ஓரம் கட்டப்படுகிறதோ என்ற எண்ணம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்ததால், தங்கள் ஆதரவு தேவையில்லை என பாஜக கருதுகிறதா என்றும் ஓபிஎஸ் தரப்பு கேள்விகளை முன்வைக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *