
சுதந்திரம் பெற்றபோது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், நாட்டுக்குத் தீங்கு விளைவிக்க யாரும் துணிந்திருக்க மாட்டார்கள் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ‘பிரிவினைக் கொடுமைகள் நினைவு நாள்’ நிகழ்ச்சி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பேசிய அவர், சுதந்திரத்தின் போது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், நாட்டிற்குத் தீங்கு விளைவிக்க யாரும் துணிந்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். பஞ்சாபிலும், வங்காளத்திலும் பாகிஸ்தான் ஒருபோதும் கேட்காத நிலம் அவர்களுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து வழங்கப்பட்டது தனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருப்பதாகத் தெரிவித்தார். பாகிஸ்தான் மாகாணமான சிந்துவில் ஒரு காலத்தில் சிந்திக்களும் இந்துக்களும் பெரும்பான்மையாக இருந்த நிலையில், அது வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.
நமது நாடு காங்கிரசை நம்பியதாகவும், ஆனால் காங்கிரஸ் நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மவுனம் காத்து வருவதாகக் கூறினார். வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதுமே காங்கிரசின் நோக்கம் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.





