
இந்திய நாட்டின் 80ஆம் ஆண்டு விடுதலை நாள் விழாவையொட்டிச் சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் 80ஆம் ஆண்டு விடுதலை நாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது. சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் விடுதலை நாள் விழா நடைபெற்றது.
விழாவுக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜயைத் தலைமைச் செயலாளர் சாய்குமார் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். அதன்பின் முதலமைச்சர் காவல்படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கோட்டைக் கொத்தளத்தில் உள்ள கொடிமரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
80ஆம் ஆண்டு விடுதலை நாளையொட்டி முதலமைச்சர் ஜோசப் உரையாற்றினார். அப்போது, நாம் பெற்ற சுதந்திரம் சிலருக்கானதாக மட்டும் இல்லாமல் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்றுவதும், 2036ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒன்றரை இலட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்டதாக மாற்றுவதுமே தமது அரசின் இலக்கு என்று தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை 23 ஆயிரம் ரூபாயாகவும், விடுதலைப் போராட்ட வீர்களின் குடும்பங்களுக்கான ஊதியம் 12 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்க சேதுபதி ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கான ஊதியம் 11 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
80ஆண்டு விடுதலை நாளையொட்டிச் சிறப்பு விருதுகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார். தகைசால் தமிழர் விருது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.
அப்துல்கலாம் விருது மருத்துவர் மோகனுக்கும், கல்பனா சாவ்லா விருது நவ்சீனுக்கும், நல்லாளுமை விருது நீலகிரி மாவட்ட ஆட்சியர் இலட்சுமி பவ்யா தண்ணீருக்கும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் விருது மருத்துவர் கீதாஞ்சலிக்கு வழங்கப்பட்டது.
விழாவுக்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இனிப்புகளை வழங்கி விடுதலை நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதன்பின் விருதுபெற்றோருடன் சேர்ந்து படம்பிடித்துக்கொண்டார். விழா முடிந்தபின் சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்களுக்குக் கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.



