Kamarajar History : பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு..!

Advertisements
பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா இன்று கல்வித் திருவிழாவாகத் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் காமராஜர். எளிய குடும்பத்தில் பிறந்தவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார்.

6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.காமராசருக்கு ஆறு வயதாக இருந்தபோது, இவருடைய தாத்தாவும் தந்தையும் அடுத்தடுத்து காலமானத்தைத் தொடர்ந்து, இவருடைய தாயார் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பின்னர் இவர் தனது 12 வயதில் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு, தனது தாய் மாமா நடத்தும் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பழங்கால தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்டார். மேலும் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து முருகன் வழிபாட்டிலும் நேரத்தைச் செலவிட்டார்

காமராசர் 13 வயதிலிருந்தே பொது நிகழ்வுகளிலும் அரசியலிலும் ஆர்வம் காட்டினார். தனது மாமாவின் கடையில் பணிபுரியும்போது, பஞ்சாயத்துக் கூட்டங்கள் மற்றும் பிற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். சுதேசமித்திரன் தமிழ் நாளிதழைத் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து வந்தார். கடையில் தனது வயதுடையவர்களுடன் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி விவாதித்தார்.

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ம் வகுப்புவரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராகக் காமராஜர் செயல்பட்டார்.

காமராஜர் கர்ம வீரர் என்றும், கிங் மேக்கர் என்றும், ஏழைப் பங்காளன் போன்றும் போற்றப்பட்டவர். இளம் வளதியலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பல முறை சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார். 1940-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். 1964-ல் அகில இந்திய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் காமராஜர். அதனால்தான் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்படுகிறார்.

அதோடு, 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1947-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், 1949-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-ல் எம்.பி.யாகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1969 மற்றும் 1971ல் எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்தவர் காமராஜர். 1972-ல் தாமிர பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் 1975-ல் காமராஜர் மறைந்தார்.

பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று (15ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது.

காமராஜர் பிறந்த பிறந்த ஊரான விருதுநகரில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் இன்று காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலமாகப் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுவதால் விருதுநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.இந்தியாவில் 1975 ஜூன் 25ஆம் தேதி நெருக்கடி நிலை அமலுக்கு வருவதாகப் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். 1966இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபோது, மொரார்ஜி தேசாய்க்கு பதிலாக இந்திரா காந்தி பிரதமராவதில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்போது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த கு. காமராஜர்.நெருக்கடி நிலை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, 1969இல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து, இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் எனப் பிரிந்துவிட்ட நிலையில், ஸ்தாபன காங்கிரசின் தலைவராக இருந்தார் காமராஜர். இந்திரா காந்தியின் இந்தச் செயல் அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

அவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் இருந்த நிலையில், 1975ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு உடல்நிலை மெல்ல மெல்ல மோசமாகத் தொடங்கியது.ஜூலையில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் மு. கருணாநிதி, ஆளுநர் கே.கே.ஷா ஆகியோர் அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தனர். அதற்குப் பிறகு சற்று உடல் நிலை தேறியது.

காமராசர் அன்னி பெசன்ட் நடத்திய தன்னாட்சி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பங்கிம் சந்திர சட்டர்ஜி, பாரதியார் ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அரசியலில் நாட்டம் கொண்டதாலும், தொழிலில் நேரத்தைச் செலவிடாததாலும், இவர் திருவனந்தபுரம் நகரில் உள்ள மற்றொரு மாமாவுக்குச் சொந்தமான மரக் கடையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். கேரளத்தில் இருந்தபோது, இவர் தொடர்ந்து பொது நடவடிக்கைகளில் பங்கேற்றார். வைக்கம் நகரில் உள்ள மகாதேவர் கோவிலில் அனைத்து சாதி மக்களும் நுழைய வேண்டி நடத்தப்பட்ட வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். காமராசர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப அழைக்கப்பட்ட பின், இவருக்கு மணமகளைத் தேட இவரது தாயார் முயற்சித்த பொது, திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

1940-இல், காமராசர் சென்னை மாகாண காங்கிரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சத்தியமூர்த்தி பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.[24] சென்னை மாகாண ஆளுநர் ஆத்தர் ஹோப் இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளுக்கு நிதியளிக்க நன்கொடைகளைச் சேகரித்ததை எதிர்த்துப் பரப்புரை செய்தார். 1940 திசம்பரில், போர்நிதிக்கு நன்கொடை அளிப்பதை எதிர்த்துப் பேசியதற்காக இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருக்கும் போதே 1941-இல் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலையானதும் நேராகச் சென்று பதவி ஏற்றவுடன், உடனடியாகப் பதவியை விட்டும் விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.

ஆகத்து 1942-இல், காமராசர் பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரசு கூட்டத்தில் கலந்துகொண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கதிற்குப் பிரச்சாரப் பொருட்களுடன் திரும்பினார். பம்பாய் அமர்வில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களையும் கைது செய்யக் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காமராசர் உள்ளூர் தலைவர்களுக்குக் கூட்டத்தில் கூறப்பட்ட செய்தியைச் சேர்ப்பதற்கு முன்பு கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. பல்வேறு வழிகளில் கைது செய்யப்படுவதைத் தவிர்த்தார். வேலை முடிந்ததும் காவல் துறையிடம் சரணடைந்தார்.இவர் சிறையில் இருந்தபோது, மார்ச் 1943-இல் சத்தியமூர்த்தி காலமானார்.சூன் 1945-இல் விடுவிக்கப்படும் வரை மூன்று ஆண்டுகள் சிறைக் காவலில் இருந்தார். இதுவே காமராசரின் இறுதியானதும் நீண்டதுமான சிறைத் தண்டனையாகும்.[13] இவரின் இந்திய விடுதலைப் போராட்ட ஆதரவு நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர் இவரை ஆறு முறை கைது செய்தனர். ஏறத்தாழ 3,000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றினார். எப்போதும் எளிமையான காதி சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். இதனால் இவரை மக்கள் அன்போடு “கருப்பு காந்தி” என்று அழைத்தனர்.எளிய உணவுகளையே உண்டார். அரசின் சிறப்புச் சலுகைகளைப் பெற மறுத்தார்.[70] தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அரசியலில் செலவிட்டார். உறவுகள் மற்றும் குடும்பத்திற்காக அதிக நேரத்தைச் செலவிடவில்லை.

இவர் முதலமைச்சராக இருந்தபோது, விருதுநகர் நகராட்சி தனது வீட்டிற்கு நேரடி குடிநீர் இணைப்பு வழங்கியபோது, சிறப்புச் சலுகைகள் எதுவும் வேண்டாம் என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு அல்ல என்றும் கூறி உடனடியாக அதைத் துண்டிக்க உத்தரவிட்டார். காவல்துறையின் பாதுகாப்பை மறுத்து, அது பொது மக்களின் பணத்தை வீணடிப்பதாகக் கூறினார்.[51] காமராசருக்குச் சொந்தமாகச் சொத்து எதுவும் இல்லை. இறக்கும்போது இவரிடம் கைவசம் ஒரு சில புத்தகங்களைத் தவிர ₹130 பணம், இரண்டு இணை செருப்புகள், நான்கு சட்டைகளும் வேட்டிகளும் மட்டுமே இருந்தன.

எந்தவொரு இலக்கையும் சரியான வழிமுறையின் மூலம் அடைய முடியும் என்று நம்பிய இவரைக் கர்ம வீரர் என்றும் பெருந்தலைவர் என்றும் அழைக்கின்றனர்.[73][74] இவர் முறையான உயர்கல்வி இல்லாவிட்டாலும், புத்திசாலித்தனம், உள்ளுணர்வு, மனித இயல்பைப் பற்றிய புரிதலைக் கொண்டிருந்தார். இதனால் இவரைப் படிக்காத மேதை என்கிற அடைமொழி கொண்டும் அழைத்தனர்.

காமராசரின் மறைவுக்குப் பின், 1976-இல் இந்திய அரசு இவருக்குப் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிச் சிறப்பித்தது. 2004-ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் காமராசரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ₹ 100 மற்றும் ₹ 5 மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயங்களை வெளியிட்டது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம், எண்ணூர்துறைமுகம் ஆகியவற்றிற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல தெருக்கள், தொடர்வண்டி நிலையங்கள், கட்டிடங்களுக்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரைப் போற்றும் வகையில், புது டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றம், சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முகப்பு உட்பட பல இடங்களில் இவரின் சிலைகள் உள்ளன. 2004-ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *