
திபெத்திய பவுத்த மதத் தலைவர் தலாய்லாமாவின் 90ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 140 கோடி இந்தியர்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அன்பு, அறநெறி, ஒழுக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் தலாய் லாமா விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரின் அருட்செய்திகளுக்கு அனைத்து மதத்தினரும் மதிப்புக் கொடுப்பர் என்றும், அது அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ வாழ்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேபோல அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவும் திபெத்திய பவுத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதில் திபெத்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் காக்கும் முயற்சியை அமெரிக்கா மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மொழி, பண்பாடு, சமயப் பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் அவர்களின் முயற்சிக்கு அமெரிக்கா என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
