போதைப்பொருள் இல்லாத இந்தியா – பிரதமர் மோடி தொடங்கிய அதிரடி இயக்கம்!

Advertisements

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், ‘போதைப் பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கம்’ என்ற புதிய விழிப்புணர்வுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான இலக்கை எட்டும் வகையில் மத்திய அரசு இந்த இயக்கத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்பதுடன், எவரும் அந்தப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நாடு முழுவதும் போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் 125-க்கும் மேற்பட்ட தன்னார்வ மற்றும் ஆன்மீக அமைப்புகள் இந்த இயக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீதி நாடகங்கள் மூலமாக இளைஞர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதன் தொடக்கமாக நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 1 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். இத்திட்டம் அடுத்த 100 வாரங்களுக்குத் தொடர்ச்சியான மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடைபயணங்கள் நடத்தப்படவுள்ளன.

இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “இந்த இயக்கம் தனிநபர், சமூக நலன் மற்றும் நாட்டிற்கானது. அடுத்த 100 வாரங்களும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய வலுவான அடியாய் அமையும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய இளைஞர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாகவும், போதைப்பொருளில் இருந்து விலகியும் இருக்க வேண்டும். கூட்டு நடவடிக்கைக்கு மிகப்பெரிய ஆற்றல் உண்டு. போதைப்பொருள் பயன்பாடு கவனத்தைச் சிதறடித்து இளைஞர்களின் லட்சியங்களைப் பாதிப்பதோடு குடும்பங்களையும் சிதைக்கிறது.

மேலும், போதைப் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்குக் குந்தகம் விளைவிப்பது எதிரி நாடுகளின் பயங்கரவாதத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்” என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *