
பொதுமக்களிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்த புகாரில் தொடங்கிய விசாரணை, காவல் நிலைய வாசலிலேயே ஒரு திருநங்கை தீக்குளிக்கும் அளவிற்குக் கலவரமாக மாறிய சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் திருநங்கைகள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக காவல் துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் பெண் எஸ்.ஐ தலைமையில் அங்கு சென்ற போலீஸார் திருநங்கைகள் முத்தாரி, ஷர்மி ஆகியோரை எச்சரித்து அனுப்பினர்.
அங்கிருந்து வடக்கு ரத வீதி சென்ற திருநங்கைகள் கடைகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு உள்ளனர். போலீஸார் எச்சரித்ததால் திருநங்கைகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வீடியோ பதிவு செய்தனர்.
அவர்களது செல்போனை பெற்றுக் கொண்ட போலீஸார் காவல் நிலையம் வருமாறு கூறி சென்றனர். காவல் நிலையம் வந்த முத்தாரி, ஷர்மி இருவரிடமும் போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 5 திருநங்கைகள் காவல் நிலையத்தில் உள்ள இரு திருநங்கைகளை வெளியே விடக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் இருவர் சாலையில் வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தனர். போலீசார் ஒருவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்ட நிலையில், சாலையில் ஓடிய தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த முத்தரசி நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் உடலில் தீ வைத்தார்.
காயமடைந்த முத்தரசியை போலீஸார் இருசக்கர வாகனத்தில் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டி.எஸ்.பி பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் முத்துகுமார் ஆகியோர் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சிவகாசி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் வசூலிப்பது தொடர்பான புகாரைத் தட்டிக்கேட்ட போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, சக தோழிகளை விடுவிக்கக் கோரி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்த திருநங்கையின் செயல் அந்தப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. உயிருக்குப் போராடும் நிலையில் திருநங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் திட்டமிட்ட மிரட்டலா அல்லது ஆவேசமான முடிவா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம், பொது இடங்களின் பாதுகாப்பு மற்றும் திருநங்கைகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகே, இதில் தவறு யார் பக்கம் என்பது முழுமையாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


