“ரீல்ஸ் போடுவதே இந்த அரசின் வேலை!” – தவெக அரசை விளாசிய உதயநிதி!!

Advertisements

மேகதாது அணை கட்டுவதைத் தடுத்திடத் தவறிய தவெக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான கே.என்.நேரு வரவேற்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதலமைச்சர்தான் காரணம் என்றும், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் இதுபற்றி வாய் திறந்து பேசவில்லை என்றும் குற்றம்சாட்டினார். ஆடி 18-ம் நாளான இன்று ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓட வேண்டும், ஆனால் டெல்டா தற்போது நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது என்று கூறிய அவர், நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதலமைச்சரால்தான் இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என ஆவேசமாகப் பேசினார்.

கர்நாடக முதலமைச்சரைப் பார்ப்பது இருக்கட்டும், நம் ஊரு விவசாயிகளை முதலமைச்சர் விஜய் சந்தித்தாரா என்று கேள்வி எழுப்பிய அவர், தயவுசெய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள் என முதலமைச்சர் விஜயிடம் கர்நாடக முதலமைச்சர் கூறிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதலமைச்சர் என்றும், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதலமைச்சருக்குத் திராணி இல்லை என்றும் விமர்சித்தார். காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விவசாயிகள் கண்ணீர் வடிக்கக்கூடிய நிலையில் அமைச்சர்கள் சினிமாவிற்கு சென்று கண்ணீர் வடிப்பதாகவும், தினமும் மாலை 4 மணி ஆனால் போதும் ஏதாவது ஒரு ரீல்ஸ் போட்டு திசைதிருப்புகிறார் முதலமைச்சர் என்றும் சாடினார்.

அமைச்சரவையை கடுமையாக விமர்சித்த உதயநிதி, நிருபர்களைப் பார்த்தால் திருடன் போல் ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் என்றும், திருட்டு லாட்டரி விற்ற அமைச்சர், திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருளுடன் சுற்றும் அமைச்சர் என ஒட்டுமொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது என்றும் கூறினார். அமைச்சரின் அண்ணன், தம்பி எல்லாம் ஆய்வுக்கு செல்வதால் யார் அமைச்சர் என அதிகாரிகளுக்கே தெரியவில்லை என்றும், ஏன் யார் யார் அமைச்சர் என முதலமைச்சருக்கே தெரியாது என்றும் கிண்டலடித்தார். முதலமைச்சர் ரீல்ஸ், அமைச்சர்கள் ரீல்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரீல்ஸ் என அனைவரும் ரீல்ஸ் போட்டுக்கொண்டு சுற்றுவதாகவும், கழிவறையைக் கூட விட்டுவைக்காமல் ரீல்ஸ் போடும் கேடுகெட்ட அரசை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை என்றும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மெட்ரோ ரெயில் பாலத்திற்குச் சென்று முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்வதையும், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ரீல்ஸ் போடுவதையும் சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவே முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்கிறார் என்றார். காவிரி பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது ரீல்ஸ் கண்டென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், ஊரார் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்து கொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்தார்.

அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்கிறார் விஜய், ஆனால் இப்போதே அதை செய்யலாமே என்று கேள்வி எழுப்பிய அவர், தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான் என்றார். திமுகவின் தூண்டுதலால்தான் விவசாயிகள் போராடுவதாகக் கூறி அவர்களைக் கொச்சைப்படுத்தியவர் முதலமைச்சர் விஜய் என்றும், தமிழகத்தில் பலவீனமான ஆட்சி நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டுதான் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்தார். இறுதியாக, வாயைத் திறங்க, வாயைத் திறங்க, மேகதாது பிரச்சினையில் தூங்கி வழியும் முதலமைச்சரே வாயைத் திறங்க, விவசாயிகளின் வேதனைகள் புரியலையா என்று முழக்கமிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *