
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கடந்த 20-ம் தேதி அவரைக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு இருமுறை தள்ளுபடி செய்தது. இதனால் அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், “இனிமேல் இதுபோன்று பேசமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும்; தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சட்டமன்றம் நடைபெறும் நாளில் மட்டும் கையெழுத்திடுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது” என்றும் ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.
மார்க்கண்டேயன் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள்:
“மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துக்கொள்கிறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை” என்று மார்க்கண்டேயன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.




