K. Annamalai: எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை!

Advertisements

சென்னை: வெள்ள பாதிப்புக்குள்ளான மக்கள் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் வானிலை மையம்மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சொல்கிறாரெனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: நிர்வாகத் தோல்வியை மறைக்க, காலங்காலமாய் திமுக பயன்படுத்தும், மத்திய அரசின் மீது பழிபோடும் துருப்பிடித்துப் போன யுக்தியை, மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இந்த முறை ஏமாற மக்கள் தயாராக இல்லை.

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரூபாய் 4,000 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொண்டு வந்ததாகக் கூறி வந்த திமுக, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அமைச்சர், 70% பணிகள் நிறைவடைந்து விட்டன, 80% பணிகள் நிறைவடைந்து விட்டன என்று ஒவ்வொரு முறையும் கதை சொல்லி, இறுதியாக 98% பணிகள் நிறைவடைந்து விட்டன என்று பொதுமக்களை நம்ப வைத்திருந்தார்கள்.

ஆட்சியில் இருப்பது திமுகவா அல்லது வானிலை ஆராய்ச்சி மையமா? கனமழை பெய்யும் என்று தெரிந்ததும், தென்மாவட்டங்களில் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை பொதுமக்களுக்குக் கூறத் தயாரா?.

கனமழையாலும், வெள்ளத்தாலும் தென்மாவட்ட மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, ‘இண்டியா” கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் டில்லி சென்றதும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார் என்பதே தெரியாமல், அவரை மீட்புப் பணிகளில் ஈடுபட நியமித்ததும், அவரை வெள்ளத்திலிருந்து மீட்கவே மூன்று நாட்கள் ஆனதும் தான் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது மக்களுக்குத் தெரியாதா?.

தங்கள் நிர்வாகத் தோல்வியால் பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிவிட்டு, மத்திய அரசின் மீது பழிபோடும் போக்கைத் திமுக இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் மடைமாற்றும் போக்கு எல்லா முறையும் வெற்றியடையாது. என்பதையும், பொதுமக்களுக்கு உண்மை தெரியவரும்போது, அவர்கள் கோபத்தின் விளைவுகளைத், திமுகவால் தாங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *