
ஆன்லைனில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தையும், அதுபோல உள்ள வேலை தரும் வாய்ப்பையும் தேடுங்கள்.
அதன் மூலம் உங்கள் தனித் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கூறினார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்ய நேர்காணல் நிகழ்ச்சி நடத்தினர்.இந்த முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, பட்டப்படிப்பு, தொழில் கல்வி, பொறியியல் கல்வி முடித்தவர்கள் வேலை தேடும் முகாமுக்கு வந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்குப் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, வேலைவாய்ப்புத் துறை மண்டல என இயக்குனர் ஜோதிமணி, கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்றோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல், வரும் ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.மாநாட்டிற்கு பிறகு பல்வேறு நிறுவனங்கள் தொழில் துவங்க உள்ளது. அப்போது கரூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எனவே வேலை தேடும் மாணாக்கர்கள், இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதியுடன் கூடுதலான திறன்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.அதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லுங்கள். அங்கு வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை எடுத்துரைப்பார்கள்.
அதேபோல நூலகத்திற்கும் செல்லுங்கள். ஆன்லைனில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தையும், அதுபோல உள்ள வேலை தரும் வாய்ப்பையும் தேடுங்கள். அதன் மூலம் உங்கள் தனித் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் தொழிலாளியாக இருப்பதைவிட முதலாளியாக மாறுவதற்கான வாய்ப்புகளை வேலைவாய்ப்புத் துறையில் தேவையான பயிற்சி அளித்து உருவாக்கித் தருவார்கள் என்றார்.

