
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான அமெரிக்க அரசின் உயர் அதிகாரி ஜோ கெண்ட் பதவி விலகியுள்ளார். அதிபர் டொனால்டு டிரம்ப் தனது பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்பின் அரசில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான இயக்குநராகப் பணியாற்றி வந்த ஜோ கெண்ட் பதவி விலகியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கடிதத்தில், அமெரிக்காவுக்கு ஈரான் அச்சுறுத்தலாக இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல், அமெரிக்காவின் அதிகாரமிக்க குழுக்கள் ஆகியவற்றின் நெருக்குதலாலேயே டிரம்ப் நிர்வாகம் போரைத் தொடங்கியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டிரம்புக்குக் கெண்ட் எழுதியுள்ள கடிதத்தில் இஸ்ரேலின் உயர் அதிகாரிகளும், அமெரிக்காவின் செல்வாக்குள்ள செய்தியாளர்களும் தவறான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன்மூலம் டிரம்ப் அரசின் உயர்பதவியில் இருந்த கென்ட், ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலை வெளிப்படையாகவே கண்டித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், கென்ட் நல்ல ஆள் என்றும், ஆனால் பாதுகாப்பில் வலிமையற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.


