
மே 10ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், வடஇந்திய சமூக வலைதளங்களில் அவர் ஏற்கெனவே தேசியத் தலைவர் என்ற பிம்பத்துடன் சுற்ற ஆரம்பித்திருக்கிறார். இது ரசிகர்களின் இயல்பான உற்சாகமா. இல்லை, திட்டமிட்ட அரசியல் பிரசாரமா இந்தக் கேள்வியே இப்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி நோயாளி உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டு விட்டாராம். விஜய்யின் கான்வாய்க்காக எங்கும் போக்குவரத்து நிறுத்தப்படுவ தில்லையாம். மக்களோடு மக்களாக டிராபிக்கிலேயே பயணம் செய்கிறாராம். பள்ளி மாணவர்களின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் எழுதும் பழக்கத்தை ஒரே மாதத்தில் ஒழித்துவிட்டாராம். பேனர், போஸ்டர் ஒட்டினால் அபராதம் மட்டுமல்ல சிறையும் உறுதியாம்.
இப்படி ஒரு ரீல். அப்படி ஒரு மீம். இன்னொரு வீடியோ எனச் சமூக வலைதளங்களில் விஜய்யை மையமாகவைத்து பல்வேறு பதிவுகள் கடந்த சில வாரங்களாக வேகமாகப் பரவிவருகின்றன. அவற்றில் பலவற்றுக்கு அதிகாரபூர்வ ஆதாரங்கள் இல்லை. இருந்தாலும், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் அந்த வீடியோக்கள் லட்சக்கணக்கான வியூஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றன.
மோடி பிரதமராக முன்னிறுத்தப்பட்டபோது, குஜராத் மாடல் என ஒன்றை முன்னிறுத்தி குஜராத்தே தனியாக வல்லரசாகிவிட்டது என்கிற ரேஞ்சுக்கு மற்ற மாநிலங்களில் மாயக்கதைகள் பரப்பப்பட்டன. டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வென்றபோதும், ஊழலை ஒழிக்க வந்த மகானாக அவர் இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டார். இவையெல்லாம் இயல்பாக நடந்ததில்லை. அவர்களுக்குப் பின்னால் இருந்த அரசியலர்களின் இமேஜை வளர்த்தெடுக்கும் வியூக வகுப்பு நிறுவனங்கள்தான் இதையெல்லாம் செய்தன.
விஜய்க்கும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அவரைப் பற்றிய கதாநாயக பிம்பத்தைப் பெருக்கும் வகையில் மாயக்கதைகள் பலவும் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்கள் மூலமும், மீம் கிரியேட்டர்கள் மூலமும் இயல்பை மீறி பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் பிரதமர் மோடியை எதிர்க்க ஒற்றை முகமாக இதுவரை யாரும் உருவெடுக்கவில்லை. அந்த இடத்தை நோக்கி விஜய்யை நகர்த்த, தேசிய அளவில் அவரைப் பெரிய அரசியல் சக்தியாக உருவாக்கவே இப்படிச் செய்துகொண்டிருக்கின்றனர்.
கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் எனத் தமிழகத்தின் முந்தைய முதல்வர்கள் பலருக்குமே தேசிய அளவில் ஒரு வலுவான இமேஜ் இருந்தது. அப்படியொரு பிம்பத்தை விஜய்க்கும் உருவாக்க வேண்டும் என அவரின் வியூக வகுப்புக்குழு நினைக்கிறது. அதனால் இன்னும் பல போலியான மாயக் கட்டுக்கதைகளை வடஇந்தியாவில், அவர்களின் மொழியில், அவர்களுக்கு நெருக்கமாகவே பரவவிடுவார்கள்.
ஏற்கெனவே விஜய்யின் பேச்சுகளை கிமி மூலம் மொழி மாற்றி கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் பரப்பிக் கொண்டிருக்கிறார். வரும் நாட்களில் இன்னும் வெவ்வேறு வடிவங்களில் சமூக வலைதளங்கள் மூலம் வடஇந்தியாவில் விஜய்க்கான பிரசாரத்தை அவரின் வியூக வகுப்புக்குழு முன்னெடுக்கும்.
இந்த டிஜிட்டல் பரவலுக்குப் பின்னால் அரசியல் வியூகம் இருப்பதாகக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சியினர், தமிழகத்தில் ஒரு மாயையை, சமூக வலைதளங்கள் மூலம் உருவாக்கி ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். இதன் பின்னணியில் முதல்வருக்கு நெருக்கமான ஒரு தனியார் நிறுவனமும், முதல்வரின் தனிச்செயலாளருமான ஜெகதீஸ் பழனிசாமியுமே இப்போதும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தைத் தாண்டி கால்பதிக்க வேண்டும் என்கிற விஜய்யின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு, அவர்தான் போலிக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிடும் வேலைகளைச் செய்கிறாரோ எனும் சந்தேகம் வலுவாக எழுகிறது. இவரைப் பற்றி ந சட்டமன்றத்திலுமே பேப்பட்டுள்ளது.. மோடியை எதிர்த்து நிற்க நினைத்தால், மாநில சுயாட்சி பேசி, களத்தில் இறங்கிப் போராடி மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
அதை விடுத்து கட்டுக்கதைகளைப் பரப்புவது கோழைத்தனம். விஜய்யை ஒரு பெருந்தலைவராக உருவாக்கப் பரப்பப்படும் போலிச் செய்திகளை உடைத்து நொறுக்கும் வேலைகளில் இனி அதிக கவனம் செலுத்துபோக்றதாம் திமுகவின் ஐடி விங். முதல்வர் விஜய் தமிழகத்தில் உச்ச சினிமா நட்சத்திரமாக இருந்தவர்.
அவருக்கு தென்னிந்தியாவைத் தாண்டி மும்பை, டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம் ஏன் பாகிஸ்தான் வரைக்குமேகூட ரசிகர்கள் உண்டு. அதனால்தான் பிரசாந்த் கிஷோரே விஜயை பீகாருக்குப் பிரசாரத்துக்கு அழைத்துச் செல்வேன் என்றார். உண்மையிலேயே விஜய்க்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருக்குமானால், சமூக வலைதளங்களில் போலியான பிம்பம் கட்டமைக்கப்படுவது ஏன்.




