போர்க்களத்தில் சிதறும் வெடிகுண்டுகளின் சத்தம் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியக் குடிமக்களின் பொருளாதாரத்தின் மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் முழுமையாக ரத்து செய்யப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்ற அதிர்ச்சியான மற்றும் குழப்பமான கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் தீயாய் பரவத் தொடங்கியுள்ளது.
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் குறித்து புதிய குழப்பம் உருவாகியுள்ளது .2026–27 நிதியாண்டில் மானியச் செலவு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், மத்திய அரசு வழங்கி வரும் மானியம் தொடருமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு, விநியோக சிக்கல்கள் போன்ற காரணங்களால் இந்த நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்கா–ஈரான் மோதல் காரணமாக உலகளவில் எண்ணெய் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹோர்மூஸ் நீரிணை வழியாக வரும் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், எரிவாயு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எல்பிஜி விநியோகமும் பாதிக்கப்பட்டதுடன், வர்த்தக சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் எல்பிஜி மானியத்துக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட வேண்டிய நிலை உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்ஜெட்டில் இதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தச் சுமையை சமாளிக்க மானியம் குறைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், மானியம் குறைந்தால் இந்த நிறுவனங்களும் நிதி சுமையை சந்திக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு மானியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், மானியம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில், மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது மாற்று வழிகளை ஆய்வு செய்து வருகிறது. சர்வதேச சந்தை நிலைமைக்கு ஏற்ப அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் , அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த அச்சுறுத்தலான போர் மேலும் நீடித்தால், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் மானியச் சுமை போன்ற தாக்கங்கள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை இன்னும் கடுமையாக உலுக்கக்கூடும். போரின் கோரப்பிடியில் சிக்கியுள்ள சர்வதேச எரிபொருள் விநியோகம் சீராகி, மத்திய அரசு இந்த நிதிச் சுமையை எப்படிக் கையாளப் போகிறது என்பதைப் பொறுத்தே எல்பிஜி மானியத்தின் எதிர்காலம் முழுமையாக நிர்ணயிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது..



