50 கால காங்கிரஸ் பந்தம் முறிந்தது!

அசாமின் நாகான் தொகுதி மக்களவை உறுப்பினரான பிரதியுத் பர்தோலாய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்துள்ளார்.

அசாமில் ஐம்பதாண்டுகளாகக் காங்கிரசில் இருந்த பிரதியுத் பர்தோலாய் நாகான் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அசாமில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் நாள் நடைபெற உள்ள நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்துத் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதற்காகத் தான் மாறவில்லை என்றும், கட்சியில் தன்னை அவமானப்படுத்தியதாகவும் அதனால் தான் அதிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்துத் தில்லியில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மாநில பாஜக தலைவர் திலீப் சைக்கியா ஆகியோர் முன் பிரதியுத் பர்தோலாய் பாஜகவில் இணைந்தார்.அப்போது பேசிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, காங்கிரசில் ஐம்பதாண்டுகளாக இருந்த பிரதியுத் பர்தோலாய் பாஜகவில் இணைந்துள்ளதாகவும், அவரின் வருகையால் பாஜக மேலும் வலிமை பெறும் என்றும் தெரிவித்தார்.

காங்கிரசில் இருந்து இன்னும் பலர் விலகிப் பாஜகவுக்கு வருவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *