Advertisements

காசா மக்களுக்கு ஆறு நாடுகளின் உதவியுடன் வான்வழியே உணவுப்பொட்டலங்களைப் போட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் அந்த நகரமே சீர்குலைந்து காணப்படுகிறது. எங்கும் கட்டட இடிபாடுகள் உள்ள நிலையில் அங்கு மனிதர்கள் வாழத் தகுதியில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உருக்குலைந்த வீடுகளை விட்டு வெளியேற மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல உணவுக்கு வழியின்றிப் பட்டினியுடனும் அச்சத்துடனும் பொழுதைக் கழிப்பதாகக் கூறப்படுகிறது.
காசா நகரில் உள்ள 20 இலட்சம் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பல நாட்களாக உணவில்லாததால் பட்டினியுடன் வாழ்வதாகவும், இதனால் பட்டினிச்சாவுகள் நேரும் என்றும் ஐ.நா. உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், எகிப்து, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளின் உதவியுடன் காசாவின் தெற்குப் பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் வான் வழியாக உணவுப் பொட்டலங்களைப் போட்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைவர் இயல் சமீர் தெரிவித்துள்ளார்.
Advertisements




