செந்தில் பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவருக்குத் தொடர்புடைய இடங்கள் உட்படத் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்குப் பத்து ரூபாய் கூடுதலாகப் பெற்று மாதந்தோறும் 102 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் திரட்டப்பட்டு அமைச்சருக்கும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கும் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யத் தலைமைச் செயலாளருக்கும், காவல்துறையித் தலைமை இயக்குநருக்கும் அமலாக்கத்துறை அறிக்கை அனுப்பி இருந்தது.

இந்நிலையில் டாஸ்மாக் ஊழல் தொடர்பாகத் தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 41 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுக் கிடங்குகள், மேட்டுப்பாளையத்தில் உள்ள சாராய ஆலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலுக்குச் சொந்தமான சாராய ஆலை ஆகியவற்றில் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தொண்டிச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கிடங்கிலும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும், அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *