
தலைமைச் செயலகத்தில் தனது வழக்கமான அரசுப் பணிகளைக் கவனித்து முடித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று அதிரடியாகப் பொதுப்போக்குவரத்தான மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த அவரைத் துறை சார்ந்த அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மெட்ரோ ரயிலில் ஏறிய அவர், சாதாரண பயணிகளைப் போல அமர்ந்து நந்தனம் நிலையம் வரை பயணம் செய்தார்.
நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வந்திறங்கிய முதல்வர் விஜய், நேராக அங்கு அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கிண்டி கத்திப்பாரா பகுதிக்குச் செல்லும் அவர், அங்கு தீவிரமாக நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
மேலும், இத்துடன் தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து போரூர் மற்றும் பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கப் பணிகளையும், சோதனை ஓட்டத்தையும் முதல்வர் ஜோசப் விஜய் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். முதலமைச்சரே காரைத் தவிர்த்துவிட்டுத் நேரடியாக மெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் பயணித்து இந்த அதிரடி கள ஆய்வுகளை மேற்கொண்டு வருவது அரசு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


