
காவிரி நீரைப் பங்கிடுவதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நீடித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், காவிரியில் இருந்து இன்று (29-ம் தேதி) முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கன அடி வீதம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவின்படி கர்நாடக அரசு இதுவரை தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடவில்லை.
இந்நிலையில், தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்ய உள்ளது. தங்கள் மாநிலத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர்த் தேவை அதிகமாக இருப்பதால், தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் தற்போது இல்லை என்று அம்மாநில அரசு தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.




