இந்திய அணி வென்றதையடுத்து திரௌபதி முர்மு, பிரதமர் வாழ்த்து..!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி, சாம்பியன் பட்டம் வென்றதையடுத்துக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, சாம்பியன் பட்டம் வென்றது.

வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தியில், மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கோப்பையை முதன்முறை வென்றுள்ளதன் மூலம் புதிய வரலாற்றைப் படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திறமையாகவும் நேர்த்தியாகவும் சிறப்பாக விளையாடியதன்மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் வீராங்கனைகள் காட்டிய நுணுக்கம், தன்னம்பிக்கை, பாராட்டுக்குரியது என்றும் எதிர்காலப் பெண் வீராங்கனைகளுக்கும் ஊக்கம் தரும் வெற்றியை இந்திய மகளிர் அணி நிகழ்த்தியுள்ளது” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் வரலாற்று வெற்றியை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடே இந்த வெற்றிக்குக் காரணம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *