
13ஆவது மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
13ஆவது மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணியின் தரப்பில் அதிகப்பட்சமாக சஃபாலி வர்மா 87 ரன்களும் தீப்தி சர்மா 58 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கித் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று ஆடி 101 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் உள்ள வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
தென் ஆப்பிரிக்க அணி 45 ஓவர்களில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
இப்போட்டியின் ஆட்ட நாயகர் விருது சஃபாலி வர்மாவுக்கும் தொடர் நாயகர் விருது தீப்தி சர்மாவுக்கும் வழங்கப்பட்டன.


