
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததையும், மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துச் சட்டத்தின் பிடியில் நிறுத்திக் கடும் தண்டனை வாங்கித்தர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைவர் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுவதாகவும், முதலமைச்சரோ கவலையின்றிக் கம்பு சுற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில், கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது திமுக ஆட்சியில் மாணவிகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதற்கான சான்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், இதற்குத் தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




