
காவிரி நீர் பிரச்னை: சைலண்ட் மோடில் தூங்குவதுபோல் நடிக்கும் நடிகர் சங்கம்
காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னையில் தமிழ் நடிகர் சங்கம் ஒரு போராட்டத்தைகூட அறிவிக்காமல் இருப்பது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
காவிரி நீர் பிரச்னை என்பது தமிழ்நாடு – கர்நாடகா ஆகிய மாநில நிலப்பரப்புகளுக்கிடையே ஏறக்குறைய நூறாண்டுகளாக நடைபெற்று வரும் பிரச்னை ஆகும். இந்நிலையில் கர்நாடகாவில் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசு, காவிரிக்கு எதிராக மேக்கே தாட்டு என்னுமிடத்தில் அணை கட்டுவதற்குண்டானப் பணிகளை முடுக்கிவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்குச் சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டார். பின் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என, கர்நாடக மாநிலத்திற்குப் பரிந்துரை செய்தது. இதனால், கர்நாடகாவில் பிரச்னை வெடித்தது. தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன. கன்னட அமைப்புகள் தமிழர்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன், பெங்களூவில் நடந்த சித்தா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கன்னட அமைப்புகள், அவ்விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சித்தார்த்தை அங்கிருந்து வெளியேற்றினர். இதற்குக் கன்னட நடிகர்களான சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த கன்னட அமைப்புகளும் அவ்வாறு இல்லையெனச் சித்தார்த்திடம் மன்னிப்புக்கேட்டனர். இதுதொடர்பாகச் சென்னையில் இயங்கி வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சார்ந்த ஒருவர் கூடக் கண்டனம் தெரிவிக்கவில்லை.
சித்தார்த்துக்கு ஆதரவாக எந்தவொரு முன்னணி தமிழ் நடிகரும் பேசவில்லை. ஆனால், கர்நாடகாவில் கன்னட திரையுலகைச் சார்ந்த பலரும் காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் தரமாட்டோம் எனக்கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழ்த்திரையுலகைச் சார்ந்த அமைப்பினரால், காவிரி நீரைப் பெற்றுத்தரக்கோரி எந்தவொரு உரிமைப்போராட்டமும் நடக்கவில்லை. இதற்குக் காரணம், தமிழ் சினிமாக்களில் பல, இப்போது கன்னட சினிமாவில் டப் செய்யப்பட்டு, வெளியிடப்படுவதால், அதன்மூலம் கிடைக்கும் வருவாய் நின்றுபோகும் என முன்னணி தமிழ் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் அமைதி காத்து வருகின்றனர். அதேபோல், தமிழ்நாடு அரசு சார்பிலும், தமிழக – கர்நாடக எல்லையில் தமிழகப் பேருந்துகள் தாக்கப்படுவது குறித்து எந்தவொரு அறிக்கையினையும் தமிழ்நாடு அரசு விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


