IND vs ENG 5th Test: இந்திய அணி நிதான ஆட்டம்!

Advertisements

சிறப்பாக விளையாடி அரைசதமடித்த ஜெய்ஸ்வால், 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தர்மசாலா: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய வீரர்களில் ரூட் மற்றும் பேர்ஸ்டோ தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆனதும் அடங்கும்.

வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்மசாலா மைதானம் அப்படியே தலை கீழாக மாறிச் சுழலுக்குச் சாதகமாக அமைந்தது. அதனைப் பயன்படுத்தி சிறப்பாகப் பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தினர்.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாகத் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்களும், பேர்ஸ்டோ 29 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி அசத்தினர்.

இந்தியா தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக விரட்டி ரன்களை திரட்டினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

சிறப்பாக விளையாடி அரைசதமடித்த ஜெய்ஸ்வால், 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 135 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியைவிட 83 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்டம் முழுவதும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *