
மேடவாக்கத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்திநகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அபிநயா. இவர்களது இரண்டு வயது பெண் குழந்தை தன்ஷிகா.
இன்று காலை 10 மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன்ஷிகாவை காணவில்லை. இதையடுத்து அவரது தாயார் அபிநயா தேடி பார்த்து உள்ளார். அப்பொழுது வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குழந்தை தன்ஷிகா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை தன்ஷிகா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தை உடலைக் கைப்பற்றிப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவிகேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறார்கள்.

