
குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் காரணம் காட்டி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவிற்கு ஆளும் பாஜக அழுத்தம் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதையும், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கர் எம்.எல்.ஏ. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜகதீப் தன்கர் கடந்த 1993 முதல் 1998 வரை ராஜஸ்தான் மாநிலம், கிஷன்கர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்துவந்தார்.
இந்நிலையில், தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் அந்த ஓய்வூதியத்தை கேட்டு ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு ஓய்வூதிய விண்ணப்பத்தின் மீதான வேலைகள் துவங்கியுள்ளதாகவும், அவர் குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தினத்தில் இருந்து அது வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.
ராஜஸ்தானில் ஓய்வு பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ. 35,000 ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், 70 வயதுக்கு மேற்பட்டவர் என்றால் அத்துடன் 20% கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்படும். அந்த வகையில் தற்போது 74 வயதான ஜகதீப் தன்கருக்கு அவரது மருத்துவ பராமரிப்பு, பயணப்படி உள்ளிட்டவற்றுடன் ரூ. 42,000 வழங்கப்படும்.
இதுமட்டுமின்றி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவற்றின் ஓய்வூதியத்துடன் தற்போது முன்னாள் எம்.எல்.ஏவுக்கான ஓய்வூதியமும் சேர்த்து வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.



