இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை!

Advertisements

திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பெருந்திரளணி `ஜாம்புரி’ என்ற பெயரில் மாநாடுபோல் நடந்து வருகிறது.

இந்த மாநாட்டில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளிலிருந்து சுமார் 20 ஆயிரம் சாரண-சாரணியர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த விழாவைக் கடந்த 28-ந்தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விழாவில் ஒவ்வொரு நாளும் இதில் பங்கேற்றுள்ள மாணவ- மாணவியர்கள் தங்களது மாநிலத்தின் கலை, பண்பாடு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகளிலும், குழு மற்றும் தனிநபர் திறன் தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம்மூலம் இன்று மதியம் 2 மணி அளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து சாரண-சாரணியர் இயக்க வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டுச் செல்கிறார்.

விழா முடிந்த பின்னர் கார்மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து விமானம்மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காகத் திருச்சி விமான நிலையம் மற்றும் அவர் பயணம் செய்ய உள்ள வழித்தடங்களில் `டிரோன்’கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையத்திலிருந்து அவர் தங்க உள்ள ஓட்டல் வரையும் சாலைகள் சீரமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *