அமித் ஷா குறித்து சர்ச்சையாக பேசிய எம்.பி. மஹுவா.!

மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சமீபத்தில் மேற்குவங்கம் மாநிலம் நதியா மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையை மேற்கோள் காட்டி, “பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் நின்று கொண்டு, ஊடுருவல்காரர்களால் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனப் பேசுகிறார்.

இதனை அவர் பேசும்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் வரிசையில் நின்று கொண்டு, சிரித்தப்படியே கைத்தட்டுகிறார்.இந்திய எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.எஃப். உட்பட ஐந்து படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அதற்கு முழு பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். அப்படியிருக்க மேற்கு வங்க அரசை எப்படி பாஜகவினர் குறை கூற முடியும்?

இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், ஊடுருவல்காரர்கள் நூற்றுக்கணக்கில் நுழைந்தால், நம் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்தால், நம் நிலங்களை அபகரித்தால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையை வெட்டி மேசையில் வைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.இவரது இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் உட்பட பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

இந்நிலையில், எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்பூரில் உள்ள மானா கேம்ப் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.கோபால் சமந்தோ என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராய்பூர் மானா கேம்ப் காவல்நிலையத்தில் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு பிரிவினர் இடையே மோதலை உண்டாக்குதல், தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமாகப் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *