
இந்தியாவை உயிரி மருந்து உற்பத்தி மையமாக உருவாக்க அடுத்த ஐந்தாண்டுகளில் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும், செமிகண்டக்டர் சிப்கள் தொழில்துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 – 2027 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, பொருளாதார வளர்ச்சி ஏழு விழுக்காடாக இருப்பதாகவும், இதனால் வறுமை குறைந்து, மக்களின் வாழ்நிலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நீடித்த பொருளாதார வளர்ச்சியை முடுக்குவதற்கு ஏழு துறைகளில் உற்பத்தியை உயர்த்தத் தான் தீர்மானித்துள்ளதாகக் கூறினார். தொழில்துறைக்குப் புத்துயிரூட்டல், சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வெற்றிபெறச் செய்தல், உட்கட்டமைப்புத் திட்டங்களில் உந்துதல், நெடுங்காலப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல், மாநகரப் பொருளாதார மண்டலங்களை மேம்படுத்தல் ஆகியவற்றைச் செயல்படுத்த உள்ளதாகக் கூறினார்.
இந்தியாவை உயிரி மருந்து உற்பத்தி மையமாக உருவாக்க அடுத்த ஐந்தாண்டுகளில் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாகக் கூறினார். தொழில்நுட்ப வல்லுநர்களையும், திறன்வாய்ந்த தொழிலாளர்களையும் உருவாக்க இந்தியா செமிகண்டக்டர் திட்டத்தில் தொழில்சார் ஆராய்ச்சிப் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார். இதற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.




