
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களுக்கு எவ்வளவு மின்சாரம் தேவை என்ற புள்ளி விவரங்களை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி தென்மாநிலங்களிலேயே மின் தேவை 69 ஆயிரத்து 934 மெகாவாட்டில் இருந்து 73 ஆயிரத்து 805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. அதிலும் தமிழ்நாட்டின் மின்தேவை 19 ஆயிரத்து 679 மெகாவாட்டில் இருந்து 19 ஆயிரத்து 822 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
தென்மாநிலங்களிலேயே மின்தேவையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மின்தேவை நாள்தோறும் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது கோடைக்காலத்தில் மேலும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 21அம் நாள் தமிழ்நாட்டின் மின்தேவை 21ஆயிரத்து 60 மெகாவாட் என்கிற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மாலையில் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மத்திய மின்துறை எச்சரித்துள்ளது.
மின்பற்றாக்குறையைச் சரிசெய்ய மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.



