
சொந்தத் தேவைகளுக்காக ஒரு கட்சியில் இருந்து பிரிந்து இன்னொரு கட்சியில் சேர்வது நல்லதன்று என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏழு உறுப்பினர்களுடன் பிரிந்து சென்று பாஜகவில் சேர்ந்துள்ளார். இது குறித்து மகாராஷ்டிரத்தின் அகல்யா நகரில் காந்தியவாதியும் சமூகச் செயற்பாட்டாளருமான அன்னா ஹசாரே செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது, ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேர்வது சரியன்று எனத் தெரிவித்தார். சொந்தத் தேவைகளுக்காகக் கட்சி மாறுவது நல்ல போக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது பற்றி நம் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறினார். எல்லாவற்றையும் விட அரசியலமைப்புச் சட்டம் உயர்வானது என்றும், அதன் அடிப்படையில்தான் நாடு செயல்படுவதாகவும் அன்னா ஹசாரே கூறினார்.
ராகவ் சத்தா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் பிரிந்து சென்றது பற்றி ஆம் ஆத்மிக் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் செய்தியாளரிடம் பேசினார். அப்போது, அவர்கள் ஏழுபேரும் துரோகிகள் எனக் குற்றஞ்சாட்டினார்.
பஞ்சாப் மக்களின் சிக்கல்களை எடுத்துக் கூறுவதற்காகத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் கட்சியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் மக்களைப் பயங்கரவாதிகள் என்று கூறும் கட்சியில் சேர்ந்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். 750 உழவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான கட்சியில் அவர்கள் சேர்ந்தது துரதிருஷ்டவசமானது என்றும் பிரியங்கா காக்கர் கூறினார்.




