சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆங்கில உரைக்கு வைகோ பாராட்டு.!

சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்கள் சிறப்பாக பதில் அளிக்கின்றனர் எனவும்,  முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஆங்கிலத்தில் வாசித்தது மிகச் சிறப்பாக இருந்தது என்றும் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆதரவு கட்சிகளுடன், வரும் 9-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் ஆலோசனை கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடதுசாரி தலைவர்களை தொடர்ந்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் சந்தித்தனர்.

அதனை தொடர்ந்து வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எதிர்க்கட்சியிலிருந்து, பல்வேறு விமர்சனங்கள் பாய்ந்தாலும், அவற்றை இடைமறித்து சிறப்பாகப் பதிலளிக்கும் ஆற்றலை த.வெ.க. அமைச்சர்கள் பெற்றிருக்கிறார்கள் என்றும், அதனால்தான் அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டு சாதித்து வருகிறார்கள் என்றும் வைகோ தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற நேரலையை மக்கள் பார்க்கும்போது, ஒரு தெளிவு ஏற்படுகிறது. அது ஆளும் கட்சிக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவைப் பெருக்கி கொடுக்கிறது எனவும், தொலைக்காட்சியில் சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக ஒளிபரப்பப்படுவது, இது ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் நல்லது,  ஜனநாயகத்திற்கும் நல்லது என்றும் வைகோ தெரிவித்தார்.

மேலும், கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஊழலை ஒழிப்பது ஒன்றே எங்களின் குறிக்கோள் என்று சொன்னது மட்டுமல்லாமல், அதில் வெற்றி பெற்று வருகிறார்கள் என்றும், ஒரு ஆட்சிக்கு இதைவிட மகுடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்றும், தவெக ஆதரவு கட்சி கூட்டத்தில் நிச்சயம் மதிமுக கலந்துகொள்ளும் என்றும் பொதுச் செயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *