ஒன்னும் ஒன்பதும் சிங்கிள் டிஜிட் தான்..தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு தான் ஃபைனல்?

Advertisements

2026 தேர்தலில் தேமுதிக கூட்டணிக்கு வந்தால் ஒற்றை இலக்கத்தில் அதாவது ஆறு சீட்டு தான் வழங்கப்படும் என்பது திமுகவும் அதிமுகவும் உறுதி செய்து வைத்திருக்கும் ஒன்று. ஆனால் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டு வேண்டும், ராஜ்யசபா எம்பி பதவி, பாஜக கூட்டணிக்கு சென்றால் மதிய இணையமைச்சர் பதவி உள்ளிட்ட டிமாண்டுகளை தேமுதிக தரப்பு வைப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு இரு பிரதான கட்சிகளும் ஒப்புக்கொள்ளாததால் தான் தேமுதிக கூட்டணி முடிவு செய்யப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணிகளை வலுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள நிலையில், எந்த அணியில் சேர வேண்டும் என்ற குழப்பத்தில் தேமுதிக இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.காங்கிரஸ் திமுகவை விட்டுச் சென்றால் அதிக தொகுதிகள் கேட்கலாம், அதிமுக கூட்டணிக்குச் சென்றால் ராஜ்யசபா சீட் உடன் பாஜகவிடம் மத்திய இணையமைச்சர் பதவி கேட்கலாம் என்ற திட்டமே தேமுதிகவுக்கு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் காலத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்த தேமுதிக, 2006-ம் ஆண்டு முதல் முறையாக போட்டியிட்டபோதே 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தது. 2011-ல் அதிமுக கூட்டணியில் இணைந்து 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரைக் கொண்ட கட்சியாக உயர்ந்தது. ஆனால் அதன் பின்னர் கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிவடைந்தது. 2016-ல் ஒரு இடமும் வெல்ல முடியாமல் போனது. 2021-ல் 60 தொகுதிகளில் போட்டியிட்டும் வெற்றி இல்லாமல், 0.43 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது கட்சியின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துகிறது.

இந்த தரவுகளையே முன்வைத்து திமுகவும் அதிமுகவும் தேமுதிகக்கு ஒற்றை இலக்கத்திற்குள் மட்டுமே சட்டமன்றத் தொகுதிகள் வழங்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதலாக ஒரு எம்.பி. சீட் அளிக்கலாம் என்ற சலுகையும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கும் மேலான இடங்களை தேமுதிக தரப்பு எதிர்பார்க்கிறது என்பதே தகவல். விஜய்யின் அரசியல் வருகையால் இந்த முறை வாக்கு சிதறல் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என இரு பெரிய கட்சிகளும் கருதுகின்றன.

அதே நேரத்தில் கடந்த தேர்தல் முடிவுகளை பார்த்தால், தேமுதிகக்கு அதிக இடங்கள் ஒதுக்குவது பயன் தருமா என்ற சந்தேகமும் கூட்டணிக் கட்சிகளில் உள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுக தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும், தேமுதிக தரப்பு நேரத்தை நீட்டித்ததாகவும் கூறப்படுகிறது. திமுகவுடனும் மறைமுக தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. “யார் அதிக மரியாதை தருகிறார்களோ, யார் அதிக இடங்கள் வழங்குகிறார்களோ அவர்களுடன் தான் செல்ல முடிவு செய்யப்படும்” என்பது தேமுதிக தரப்பின் நிலைப்பாடாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் எடுக்கும் முடிவு வெறும் தொகுதி எண்ணிக்கையை மட்டுமல்ல, கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டையும் தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஒற்றை இலக்கத்தில் சமரசமா?, அல்லது கடுமையான பேரமா?, இல்லையெனில் தனித்துப் போட்டியா? என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லாமல் உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பேபாவது இந்த குழப்பத்திற்கு முடிவு வருமா? என்பதே இப்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய கேள்வியாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *