
தூத்துக்குடி:
‘வசதியாகத் திருடவும், பதுங்கியிருக்கவும் கொண்டுவந்தது தான் திராவிடம்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில், தனது தமிழ் தேசிய அரசியல் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர், தமிழ் மகனாகத் தன்னை அடையாளப்படுத்தி, தமிழ் தேச அரசியல் மற்றும் தமிழ்நாட்டின் பண்பாடு, மொழி, கலை, இலக்கியம், வழிபாடு, கனிம வளம், நீர்வளம் ஆகியவற்றை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு உரிமை, எல்லோருக்கும் கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்றச் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் பெருமை மிக்க வாழ்வு, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடைவதற்கான அரசியல், தமிழ் தேச அரசியல் எனப்படும். இது, தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றும் ஒரு முக்கியமான அரசியல் கொள்கையாகும்.
திராவிடம் என்றால் என்ன? திராவிட அரசியல் என்றால் என்ன? சொல்லச் சொல்லுங்கள். திராவிடம், தமிழ் தேசம் என்ற குழப்பம் எல்லாம், யாருடனாவது கூட்டணி வைத்து நிற்பதற்கு பயன்படும். இது ஒரு போர். இந்தியம் என்பதும் திராவிடம் என்பதும் கற்பிதம். இந்தியா என்கிற ஒரு நாட்டை உருவாக்கியது யார்? வெள்ளைக்காரன்.
பெயர் வைத்தது யார்? வெளைக்காரன் துப்பாக்கி முனையில் இந்தியா என சொல்ல வைத்தான். உயிரா, உரிமையா என்று கேட்டதற்கு உயிர் என்று சொல்லிவிட்டார்கள். வெள்ளைக்காரன் பெத்து, பெயர் வைத்துவிட்டு சென்றதற்கு இவர்கள் அப்பன் முறை கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். அது தான் இந்தத் திராவிடம். வசதியாகத் திருடுவதற்கு, பதுங்கி இருப்பதற்கு கொண்டு வந்தது தான் திராவிடம். திராவிடம் என்பது இனம், இடம் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
கடைசியில் தமிழ்தேசமும், திராவிடமும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டார்கள். அது எப்படி கொலைகாரனும், செத்து விழுகிறவனும் ஒன்றாக இருப்பார்கள். நான் எங்க அப்பன் செத்தால் உளமாற அழுவேன். நீ ஒப்புக்கு அழுவாய். நீயும் நானும் ஒன்றா? தமிழ்தேசம் கடற்கரையைக் கடற்கரையாகப் பார்க்கும். திராவிடம் கடற்கரையைக் கல்லறையாக்கும் எனச் சீமான் கூறியுள்ளார்.



