திமுகவில் முஸ்லிம் லீக்கும் போர்க்கொடி: திசை மாறும் காங்: மதிமுக.!

Advertisements

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக பலமான கூட்டணியாக அமைந்த போதிலும் , அதிக தொகுதிகள் கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரஸ் மதிமுக உள்ளிட்டவை போர் குரல் எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் , முஸ்லிம் லீக் கட்சியும் புதிதாக போர் கொடி பிடித்திருக்கிறது . இதுவல்லாமல் திமுக கூட்டணியில் இருந்து விலகி விடலாமா என மதிமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் திரை மறைவு ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த தேர்தலின் போது திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது . மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளிலும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளிலும் , மதிமுக 6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகளிலும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளிலும் , மனித நேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளிலும் ,  வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒரு தொகுதியிலும் , மக்கள் விடுதலைக் கட்சி ஒரு தொகுதியிலும் ஆதித்தமிழர் பேரவை ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.

இந்த நிலையில்,  வருகிற சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரையில் தமிழகம் முழுவதும் திமுகவை பலப்படுத்தும் நோக்கத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பல முடிவுகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என அவர் விரும்புகிறார். எனவே கூட்டணி கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கி தந்த தொகுதிகளை விட குறைவாக தொகுதிகளை ஒதுக்கலாமா என அவர் யோசனை செய்து வருகிறார்.

ஆனால் இதற்கு எதிர்மறையாக கூட்டணி கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தற்பொழுது 40 தொகுதிகள் கேட்கிறது. ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 11 தொகுதிகள் கேட்கிறது. இதேபோல் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக தற்பொழுது 9 தொகுதிகளை கேட்கிறது.

இந்த நிலையில்,  இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியினரும் தற்பொழுது கூடுதல் தொகுதியை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது.  இது தொடர்பான தஞ்சை மண்டல ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் பேசும் போது,  வருகிற ஜனவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி தமிழகத்தில் உள்ள 8,000 க்கும் அதிகமான பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு சுவாமி மலை நான்கு வழி சாலை அருகில் உள்ள மைதானத்தில் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.

இதன் பின்னர், அரசியல் ரீதியாக அவர் பேசும் பொழுது முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரிகள் என யாரும் கிடையாது இன்று எதிரிகளாக நினைப்பவர்கள் நாளை நண்பர்களாக மாறுவார்கள்.  இது அரசியலில் சிறந்த பாடமாகும் . இந்தியாவில் உள்ள 4,296 சமுதாயங்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் . திருப்பரங்குன்ற பிரச்சனைக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது நாங்கள் அண்ணன் தம்பி போல ஒற்றுமையாக தமிழகத்தில் இருக்கிறோம்.

வருகிற சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என முஸ்லிம் லீக் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். திமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பொழுது இதனை நாங்கள் எடுத்துச் சொல்வோம். முஸ்லிம்களுக்கு பதினாறு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் முன்பு கோரிக்கை வைத்த போது முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி எங்களுக்கு 16 தொகுதிகளையும் ஒதுக்கி தந்தார்.

அதேபோல் இப்போதும் 16 தொகுதிகளை முஸ்லிம் சமுதாயத்துக்கு ஒதுக்கி தர வேண்டும் அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மிக குறைந்த பட்சம் ஐந்து தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில்,  மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லீம் லீக் தற்பொழுது ஐந்து தொகுதிகளை கேட்கும் பட்சத்தில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை அதிகப்படுத்தி தர வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு ஏற்படும் என்பதால் திமுக மேலிடம் இதற்கு வாய்ப்பில்லை என முடிவு செய்திருப்பதாக தெரிகிறது,

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐவர் குழு அவசர அவசரமாக டெல்லிக்கு சென்று கட்சி மேல் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதில் திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித அனுகூலமும் இல்லை. அமைச்சரவையில் வாய்ப்பு என்பதை தவிர வட்டாரம் தாலுகா அளவில் கூட காங்கிரஸ் கட்சியினர் நினைப்பது எதுவும் நடைபெறுவதில்லை.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைத்தால் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைப்பதுடன் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெரும் என்கிற ரீதியில் சிலர் பேசியிருக்கிறார்கள். அதேசமயம் காங்கிரஸ் மேலிடம் இதற்கு பதில் தெரிவிக்கும் பொழுது தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தால் மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும் . ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் திமுக தான் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது எனவே திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதுதான் நல்லது என பேசி வருகிறார்கள்.

இதேபோல் மதிமுகவை பொறுத்தவரையில் தொகுதி பங்கீடு தொடர்பாக வைகோ எந்தவித முடிவும் எடுக்காத நிலையில் அவரது மகன் துரைவைகோ தங்களுக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அது பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணி வைப்பது தொடர்பாக திரை மறைவு பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்.

எனவே திமுக கூட்டணி பலமாக அமைந்த போதிலும் தொகுதி பங்கீடு தொடர்பாக தற்போது பலவீனத்தை சந்திக்க நேர்ந்திருக்கிறது என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *