உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், ஐ.சி.சி ஆண்கள் இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று வரலாற்றின் பல சிகரங்களை எட்டிய இந்திய அணிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த கூட்டு வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும், முழு நிர்வாகமும், துணை ஊழியர்களும் மிக உயர்ந்த பாராட்டுக்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஆண்கள் உலகக் கோப்பை இருபது ஓவர் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகரற்ற திறன், மன உறுதி, அணியாக நிகழ்த்திய அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த வெற்றி பறைசாற்றுகிறது எனக் குறிப்பிட்டார். இந்த வெற்றி, ஒவ்வொரு இந்தியரின் இதயங்களில் பெருமையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில், ஐசிசி ஆண்கள் இருபது ஓவர் உலகக் கோப்பையில் கடந்த மூன்று போட்டிகளிலும் நிதானத்துடன் விளையாடி, தேவையான நேரத்தில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சனின் ஆட்டத்தைக் காண்பது உற்சாகமாக இருந்தது என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து 3 ஆவது முறையாக இருபது ஓவர் உலகக் கோப்பையை ஏந்தச் செய்த அனைத்து வீரர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


