
இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவென்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு பிரியாணி என்றுதான் கூறுவார்கள்.
இந்தியர்களுக்குப் பிரியாணி என்பது வெறும் உணவல்ல அது விவரிக்க முடியாத உணர்வாகும். முகலாயர்கள் இந்தியாவிற்கு கொண்டு இந்தப் பிரியாணி தற்போது இந்தியர்களுடன் பின்னிப் பிணைந்ததாக மாறிவிட்டது.
பிரியாணி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிதான். வேறு வழியே இல்லாத நேரத்தில் வெஜ் பிரியாணியை சாப்பிடுவோம். ஆனால் பிரியாணியை வேறுசில பொருட்களை வைத்தும் சமைக்கலாம்.
அதில் மிகவும் வித்தியாசமான ஒன்றுதான் வாழைப்பூ. வாழைப்பூவை நாம் பல்வேறு வழிகளில் சமைத்து உண்டிருப்போம், ஆனால் அதில் பிரியாணி செய்ய நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டோம்.
உங்களுக்கு மற்ற பிரியாணிகள் போரடித்திருந்தால் இந்தப் பிரியாணியை முயற்சிக்கவும்.
தேவையான பொருட்கள்:
- சீரக சம்பா அரிசி – 2 டம்ளர்
- தக்காளி – 3
- பெரிய வெங்காயம் – 2
- நறுக்கிய வாழைப்பூ – 1 கப்
- பிரியாணி மசாலா தூள் – 2 ஸ்பூன்
- சிக்கன் மசாலா தூள் – 1 ஸ்பூன்
- கறி மசாலா தூள் – அரை ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- சோம்பு – 1 ஸ்பூன்
- பிரியாணி இலை – 1
- பட்டை – 2
- கிராம்பு – 5
- ஏலக்காய் – 2
- தயிர் – 4 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- நெய் – 4 ஸ்பூன்
- எண்ணெய் – 4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- புதினா – கால் கப்
- கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
செய்முறை:
- குக்கரில், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, கிராம்பு, 2 ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்திற்கு வந்தவுடன் இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- வதங்கியபின், பொடியாக நறுக்கிய தக்காளி, ஒரு கைப்பிடி புதினா, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கு ஸ்பூன் புளிக்காத தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
- வாழைப்பூ மசாலா தயாரிக்க ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் எண்ணெய், ஒரு கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, அரை ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஃப்ரை செய்யவும்.
- பின், சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
- இறுதியாக, தயார் செய்து வைத்துள்ள பிரியாணியை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, அதனுடன் ஃப்ரை செய்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.சூப்பரான வாழைப்பூ பிரியாணி ரெடி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த
சுவையான மற்றும் வித்தியாசமான உணவாக இருக்கும்.
