நள்ளிரவில் மக்கள் போராட்டம்.. தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கடும் கண்டனம்.!

Advertisements

ஆறு மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது என்று த.வெ.க. அரசிற்கு, முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாற்றத்தைத் தருகிறேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற த.வெ.க. அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில், வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது என்றும், 6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில் நள்ளிரவிலும், பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

மேலும், சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை என்ற நிலை- மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும் இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது எனவும், பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன் என்ற பஞ்ச் டயலாக் பேசிய முதலமைச்சர் ஜோசப்விஜய் மவுனமாக இருக்கிறார். மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பதும் இல்லை என்றும், பொறுப்பாக பதில்சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ, தினம் ஒரு கான்ஸ்பிரசி தியரியை எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.

தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க பேக் ரியல் போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் மின்துறை அமைச்சர் செய்கிறார் எனவும், பியூஸ் கேரியரை திருடுகிறார்கள் என்று சொல்லி, ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை அமைச்சர் பதிவிடுகிறார், பகலில் நடக்கும் திருட்டிற்கு, இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை, அமைச்சர் யோசிக்கவில்லையா என்றும், முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *