US presidential election: இதுவரை 2.5 கோடி வாக்குகள் பதிவு..! முன்கூட்டியே வாக்களிக்கு ஆர்வம் காட்டும் மக்கள்!

நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நாளாக இருந்தாலும் பல மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது.

வாஷிங்டன்:அமெரிக்காவில் அடுத்த மாதம் 5-ம் தேதி (5.11.2024) ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துக் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்தியாவை பொருத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் எனக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும். ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கைச் செலுத்தும் வசதி உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 2.5 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய மாநிலங்களில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. முன்கூட்டியே வாக்களிப்பதில் குடியரசு கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் முன்கூட்டியே புளோரிடாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *